Tuesday, June 3, 2008

Increasing memory...

தினசரி 30 நிமிடங்களில் சுயமாக - சுலபமாக நினைவாற்றல் பயிற்சி!
- டாக்டர். எம்.இரமணிசுகுமார், மனவள ஆலோசகர்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அநேக ஆற்றல்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஆற்றல் நினைவாற்றலே என்று சொன்னால் மிகையாகாது. இந்த ஆற்றலை நாம் இரண்டு வயது முதல் இறக்கும் வரை பயன்படுத்துகிறோம். நினைவாற்றலைப் பயன்படுத்துவதில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மையே. நம்மில் ஆனேகர் கூறுவதுண்டு. நினைவாற்றல் சிலருக்குக் கடவுள் கொடுத்த வரம் நமக்கு அந்த வரம் இல்லை அல்லது எனக்கு நினைவாற்றல் இல்லை என்று எண்ணி, எண்ணியே நம் நினைவாற்றலின் சக்தியைக் குறைத்துக் கொள்கிறோம்.
நினைவாற்றல் என்பது மானிடராய்ப் பிறப்பவர் அனைவருக்கும் சமமாகவே படைக்கப்படுகின்றது. மன வளர்ச்சி குன்றிப் பிறப்பவர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் சமமே. அதில் கூட, மனவளர்ச்சி குன்றிப் பிறப்பவர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். 12 வயதுள்ள மனவளர்ச்சி குன்றியவருக்கு 5 வயது உள்ள குழந்தையின் நினைவாற்றல் இருக்கும். ஆம் இது உண்மை. இருந்தும் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு? இதற்கு என்ன காரணம்? இந்த நிலையைப் போக்க என்ன வழிமுறைகள் உள்ளது என்று ஆலோசனை பண்ணிப் பார்ப்போமேயானால் அனேக விளக்கங்களும், நடைமுறைப் பயிற்சிகளும் நமக்குத் தெரியவரும்.
எந்தக் கடினமான செயல்களையும் தொடர் பயிற்சியின் மூலம் சுலபமாகவும், தெளிவாகவும் செய்யும் ஆற்றல் நம் அனைவரிடமும் உள்ளது. இச்சக்தி மிக்க ஆற்றலைப் பயன்படுத்தி தொடர் பயிற்சியின் வாயிலாக நாம் நம் நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள முடியும். எந்தச் செயலுக்கும் முதல்படி தன்னம்பிக்கையே. முதலில் எதையும் என்னால் செய்ய முடியும் என்று எண்ண வேண்டும். எந்தச் செயலும் சரியான பயிற்சியின் மூலம் அனைவராலும் செய்ய முடியும். எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


எந்தச் சூழ்நிலையிலும் நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றிட நாம் அனுமதிக்கக்கூடாது. இந்தச் செயலும் ஒரு சிறந்த பயிற்சியே. நாம் செய்யப் போகும் எந்தச் செயலுக்கும், பயிற்சிக்கும் முன்பாக மூச்சப் பயிற்சி மிக மிக அவசியம்.
மூக்கின் வழியே மூச்சை நன்றாக உள்ளே இழுத்து சிறிது நேரம் நுறையீரலில் வைத்துப் பின்பு மெதுவாக மூக்கின் வழியே மூச்சை வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும். இதனால் கிடைக்கும் நன்மைகள் உடலுக்கும் மனதுக்கும் ஏராளம்.


நம் நினைவாற்றலை வளர்க்க நாம் அதிகாலை உறக்கத்தில் கண் விழித்தது முதற்கொண்டு அ“ன்று இரவு படுக்கப் போகும் முன்பு வரை நாள் முழுவதும் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாமல் நினைவு கூர்தல் வேண்டும். இது மறு நினைவூட்டல் ஆகும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 13 நாட்கள் இரவு படுப்பதற்கு முன்பாக செய்ய வேண்டும்.
15 தினங்களுக்குப் பின்பு, அன்றன்று நடந்த நிகழ்ச்சியையும் அதற்கு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளையும் நம் மனக்கண் முன்பாகக் கொண்டு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வர வேண்டும். இந்தப் பயிறசியைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வரவேண்டும்.


பிறகு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல் நாம் உட்கொண்ட உணவு வகைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். நேற்று என்ன உணவு உட்கொண்டோம்? என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து ஒரு மாதம் செய்யும் போது அதன் பயனை அனுபவத்தின் வாயிலாக அறிய முடியும்.